உடற்பயிற்சி கூடங்களில் கொரோனா பரவாமல் தடுக்க பின்பற்ற வேண்டும்!!

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரும் 10-ந் தேதியில் இருந்து உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. உடல் நலனின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி கூடங்களை திறக்க தற்போது அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது உடற்பயிற்சி கூடங்களில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பின்பற்றப்பட வேண்டிய நிலையான நடைமுறைகள் பற்றிய அரசாணை வெளியிடப்படுகிறது.

முகக்கவசம் அவசியம்

அங்கு பொதுவான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுசுகாதார முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் உடற்பயிற்சி கூடங்களை திறக்கக்கூடாது. சுகாதாரம் தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.

50 வயதுக்கு அதிகமானோர், உடல் நலக்குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

உடற்பயிற்சியின்போது ஒவ்வொருவரும் குறைந்தது 6 அடி இடைவெளி விட்டிருக்க வேண்டும். உடற்பயிற்சிகூட வளாகத்தில் இருக்கும் நேரம் முழுவதும் கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ஆனால் உடற்பயிற்சி செய்யும்போது மட்டும் முடிந்த அளவு ‘வைசர்‘ (பேஸ் ஷீல்ட்) என்ற உபகரணத்தை பயன்படுத்தலாம். ஏனென்றால், முகக்கவசங்கள், குறிப்பாக என்-95 ரக முகக்கவசங்கள், மூச்சு விடுதலில் சிரமத்தை ஏற்படுத்தும்.

கைகளில் அழுக்கு காணப்படாவிட்டாலும் சோப்பினால் 40 முதல் 60 விநாடிகளும் அல்லது ஆல்கஹால் சானிடைசர் மூலம் 20 விநாடிகள் கைகளை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும்.

இருமல், தும்மல் வந்தால் முகத்தையும், மூக்கையும் கைக்குட்டை, ‘டிசு’ பேப்பர் பயன்படுத்த வேண்டும். ‘டிசு’ பேப்பரை உடனடியாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். கைகளை மடித்த நிலையில் அதில் முகத்தை புதைத்தபடி தும்மலாம். அங்கு யாரும் துப்பக்கூடாது. ஆரோக்கிய சேது என்ற செல்போன் செயலியை பயன்படுத்த வேண்டும். உள்ளே வரவும், வெளியேறவும் தனித்தனி வாசல்களை அமைக்க வேண்டும்.

நீச்சல் குளம்

24 முதல் 30 டிகிரி அளவு ஏ.சி. வைக்கப்பட வேண்டும். ஈரப்பதம் 40 - 70 என்ற அளவில் இருக்க வேண்டும். வெளிக்காற்றும் போதிய அளவில் வரச் செய்ய வேண்டும். சமூக இடைவெளி கிடைக்கும் அளவுக்கு, உடற்பயிற்சிகூடத்தின் பொதுத் தளம், குறிப்பிட்ட பயிற்சி பிரிவு, ஆடை மாற்றும் இடங்களில் ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.

ஸ்பா, சாவ்னா, நீராவிக் குளியல், நீச்சல் குளம் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்க வேண்டும். உடற்பயிற்சி கூடத்தின் அனைத்து இடங்களும், தொடப்படும் பகுதிகளும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

ஆன்லைன் பயிற்சிகள்

ஆன்லைன் மூலம் சில பயிற்சிகளை குழுவாக உறுப்பினர்களுக்கு அளிக்கலாம். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பயிற்சியாளர்கள், ஊழியர்களை அழைக்கக்கூடாது. “பல்ஸ் ஆக்சிமீட்டர்” கருவியை வைத்து ஆக்சிஜன் அளவை சோதிக்க வேண்டும்.

உடற்பயிற்சி கூடத்தின் வாசலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படலாம்.

உடற்பயிற்சி கூடத்தை மூடும்போது வளாகம் முழுவதையும் சுத்தப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author