தேனி,ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சுமங்கலி பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள் ஆகியவற்றை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். வழிபாடு நடத்திவிட்டு தாலிக் கயிறு புதுப்பித்து தங்களின் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்றும், மழைப்பொழிவு சீராக இருந்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும், விவசாயிகள் வாழ்வு செழிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வார்கள்.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதாலும், நேற்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும் தேனி மாவட்டத்தில் ஆற்றங்கரைகளுக்கு பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. தேனி அருகே வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்து வழிபாடு நடத்துவார் கள். ஆனால், இந்த ஆண்டு ஆற்றங்கரைக்கு செல்லும் பாதைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன.இருப்பினும் பக்தர்கள் சிலர் வழிபாடு நடத்த வந்தனர்.
அவர்களுக்கு முதலில் போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர், குறுகிய நேரத்தில் வழிபாட்டை முடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதி அளித்தனர்.அதன்படி ஒருசில பெண்கள் மட்டும் ஆற்றங்கரைக்கு சென்று வழிபாடு நடத்தி, தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் விழாக்கோலத்துடன் காணப்படும் ஆற்றங் கரை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.அதுபோல், பழனிசெட்டிபட்டி, சின்னமனூர், உப்புக்கோட்டை, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகள் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அதே நேரத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களின் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி தாலிக்கயிறு புதுப்பித்துக் கொண்டனர்.அதுபோல், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கோவில்கள் திறக் கப்படாததால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு நடத்திச் சென்றனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், கம்பம் கம்பராயப் பெருமாள் கோவில், கவுமாரியம்மன் கோவில், சுருளி அருவியில் உள்ள சுருளிவேலப்பர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் வெளியில் நின்றபடி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
You must be logged in to post a comment.