தேனி அரசு மருத்துவமனை முன்பு கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து மறியல்

ஆண்டிப்பட்டி,தேனி அருகே உள்ள நல்லகருப்பன்பட்டியை சேர்ந்த 62 வயது மூதாட்டி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கொரோனா தொற்று உள்ளதா? என கண்டறிய அவரிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி திடீரென்று உயிரிழந்தார். இதையடுத்து மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, முழு கவச உடை சுற்றப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே உடல் ஒப்படைக்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதுகுறித்து அறிந்த உறவினர்கள், மூதாட்டியின் உடலை ஊருக்கு எடுத்து செல்லாமல் அரசு மருத்துவமனை முன்பு நடுரோட்டில் வைத்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உறவினர்கள் கூறுகையில், இறந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. டாக்டர்களுக்கு பதிலாக மருத்துவ மாணவர்களை வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மூதாட்டிக்கு கொரோனா இருப்பதை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அவ்வாறு கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் உடலை ஏன் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த தேனி க.விலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூதாட்டியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து தாங்களே உடலை அடக்கம் செய்து கொள்வதாக கூறி, மூதாட்டியின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு உறவினர்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து மறியல் செய்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author