தேனி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; வீடுகளின் மேற்கூரைகள் சேதம்: மரம் சாய்ந்து 2 பசுக்கள் பலி

தேனி, தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. போடி, தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை போன்ற இடங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. போடியில் வீசிய சூறைக்காற்றால் போடி ஆதிதிராவிடர் நல அரசு மாணவிகள் விடுதியின் மேற்கூரைகள் பறந்து விழுந்து சேதமடைந்தன. அவை சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள உரம் உற்பத்தி நிறுவனத்தின் மீது விழுந்தது. இதனால், உரம் உற்பத்தி நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதவிர போடி தேவர் காலனி, மேலசொக்கநாதபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சிலமலை ஆகிய பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், சூலப்புரத்தில் 8 வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. 6 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணிக்கு பிறகே மின்வினியோகம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வரும் மக்கள் தற்போது வீடு சேதம் அடைந்துள்ளதால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வீடுகளை சீரமைக்க அரசு நிதிஉதவி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல் கடமலை- மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் கடமலைக்குண்டு கிராமத்தில் முனியாண்டிநாயக்கர் தெருவில் ஒரு மின்கம்பம் சாய்ந்தது. மின்கம்பம் சாய்ந்த போது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. சாய்ந்த போது அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. ஏராளமான இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மேல் விழுந்தன. தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மின்தடை செய்யப்பட்டது.மேலும், சிதம்பரவிலக்கு கிராமத்தில் முதியோர் காப்பக கட்டிடத்தின் மேற்கூரை உடைந்து விழுந்தது. இதில் சீனியம்மாள், முனியம்மாள் ஆகிய 2 மூதாட்டிகளுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. மஞ்சனூத்து கிராமத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததோடு, ஊருக்கு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மேலும் மண்ணூத்து கிராமத்தில் சூறாவளி காற்றினால் தென்னை, முருங்கை மரங்கள் சேதமடைந்தன. இந்த சேதங்கள் தொடர்பாக வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அரசு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையே கடமலைக் குண்டு அருகே பரமக்குடி கிராமத்தில் சூறாவளி காற்றின் காரணமாக, அங்கிருந்த மரம் ஒன்று முறிந்து அருகில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ராஜீவ்காந்தி என்பவருக்கு சொந்தமான பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் அந்த மாடு பரிதாபமாக இறந்தது. இதேபோல், முருக்கோடையில் ஒரு தோட்டத்தில் மரம் சாய்ந்து வீரணன் என்பவருக்கு சொந்தமான பசு மாட்டின் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த பசுமாடு பலியானது.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author