ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நெல்லை,நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் திறப்பு விழாவும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, ‘ரிமோட்‘ மூலம் கல்வெட்டுகளை திறந்து வைத்தார். நெல்லை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 11 திட்டப்பணிகள் திறப்பு விழா, 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, 2 ஆயிரத்து 761 பேருக்கு நலத்திட்ட உதவிகள் என்று மொத்தம் ரூ.196 கோடியே 75 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 8 திட்டப்பணிகள் திறப்பு விழா, 2 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, 3 ஆயிரத்து 231 பேருக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.78 கோடியே 77 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இருமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.275 கோடியே 52 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.ஆய்வு கூட்டம்பின்னர் கலெக்டர் அலுவலக 2-வது மாடியில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் தொழில் முனைவோர், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆகியோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.எடப்பாடி பழனிசாமி பேட்டிஅதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதேபோல் அரசு அறிவித்த திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்றும் ஆலோசித்தோம். கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றியும் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டறிந்தோம்.6 ஆயிரத்து 71 பேர் பாதிப்புதொழில் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை அழை த்து பேசினேன். அவர்கள் சில கோரிக்கைகள் வைத்து உள்ளனர்.

அந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், வேளாண்மை உற்பத்தி பெருக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதையும் பரிசீலனை செய்வோம். மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த நிர்வாகிகளும் அரசுக்கு பல கோரிக்கைகள் வைத்து உள்ளனர். அதையும் பரிசீலிப்போம்.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 6 ஆயிரத்து 71 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 ஆயிரத்து 732 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரையில் 2 ஆயிரத்து 629 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதில் 1,720 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம்கேள்வி:- கல்லூரி இறுதியாண்டு தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இதனால் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க சிரமப்படுகிறார்களே?பதில்:- இதுபற்றிய எங்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்.கேள்வி:- ராமநதி-கடனாநதி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படுமா?பதில்:- ஏற்கனவே ராமநதி-ஜம்பு கால்வாய் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திட்டத்தை எடுத்து செயல்படுத்துவோம். நீர் மேலாண்மை திட்டத்தில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்ட முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து உள்ளது. 2-ம் கட்ட பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து உள்ளன. 3-ம் கட்ட பணிகள் நடந்து வருகிறது. 4-ம் கட்ட பணிக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும்.புதிய கல்வி கொள்கைகேள்வி:- மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?பதில்:- இதுதொடர்பாக குழு ஒன்றை அமைத்து உள்ளோம்.

அந்த குழு இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும். அந்த குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.கேள்வி:- நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்‘ வெளியிட்டு உள்ளதே?பதில்:- நீலகிரியில் கனமழையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவுத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளனர். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள்.பொது போக்குவரத்துகேள்வி:- இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா?பதில்:- வைரஸ் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மண்டல வாரியாக பஸ்கள் இயக்கினோம். ஆனால் தொற்று அதிகமாகி விட்டது. அதனால் பொது போக்குவரத்தை நிறுத்தினோம். தொற்று படிப்படியாக குறைந்தபிறகு பொதுபோக்குவரத்தை தொடங்குவது குறித்து ஆலோசிப்போம். இ-பாஸ் நடைமுறையை எளிதாக்கி உள்ளோம். அத்தியாவசிய பணிகளுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதத்துக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வர விரும்பினால் இ-பாஸ் மூலம் வரலாம். அந்தந்த தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். தொற்று உறுதியாகாவிட்டால் அவர்களை பணி செய்ய அனுமதிக்கலாம்.

சாத்தான்குளம் சம்பவம்கேள்வி:- சாத்தான்குளம் சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?பதில்:- இது விரும்பத்தகாத சம்பவம். இதுபோல் நடக்கக்கூடாது. ஒவ்வொரு ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்துகொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கேள்வி:- நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2,500 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் இதுவரை அங்கு முழுமையாக தொழில் தொடங்கவில்லையே?பதில்:- தென்மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. ஏற்கனவே நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் தென்மாவட்டங்களுக்கு மட்டும் அதிகளவு முதலீடு ஈர்க்கப்பட்டது. புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு அதிகளவு சலுகை வழங்கப்படுகிறது.

அதேபோல் தொழிலை ஊக்குவிக்க மானியம் வழங்கப்படுகிறது. புதிய தொழிற்சாலைகள் விரைவில் தொடங்குவதற் கான நடவடிக்கை எடுக்கப்படும்.ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகைகேள்வி:- கொரோனா தொற்றை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?பதில்:- உடனடியாக இந்த ஆண்டு 500 ஆம்புலன்ஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆம்புலன்சில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.கேள்வி:- அடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சி தான் என்று அந்த கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே?பதில்:- அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author