முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகை: நெல்லையில் பலத்த பாதுகாப்பு

நெல்லை,தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நெல்லைக்கு வருகிறார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு நிறைவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். மேலும், ரூ.208 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் தொழில் முனைவோர், விவசாயிகள், சுய உதவிக்குழுவினரிடம் கலந்துரையாடுகிறார். பகல் 2 மணி அளவில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார்.பலத்த பாதுகாப்புஇந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுப்பிரிவு தெரிவித்த தகவலையடுத்து, நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அவர் வரும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் இருந்து நெல்லை மாநகர பகுதி வரை 21 கிலோ மீட்டருக்கு 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.நெல்லை மாநகர பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாநகரம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது

.வெடிகுண்டு சோதனைவிழா நடைபெறும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவுப்படி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நுழைவு வாயில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விழா நடைபெறும் மேடையில் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

‘மெட்டல் டிடெக்டர்‘ கருவி மூலம் வெடிகுண்டு சோதனை நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் தீத்தடுப்பு கருவி, நுரை மூலம் தீயை அணைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்து உள்ளனர்.மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநகர தூய்மை பணியாளர்கள் கொசு ஒழிப்பு புகை அடித்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி, பல இடங்களில் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளன. அவரை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author