குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலை ஆண்டார் மெயின்ரோடு பகுதியில் உள்ள இரும்பு கடை உரிமையாளரின் மகன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்த காரணத்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கடை பூட்டப்பட்டு, கடையின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து அந்த கடையை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், குடியிருப்புவாசிகள், கடையில் வேலை செய்வோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தநிலையில் அந்த இரும்புகடை அருகே உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்த பெண் ஒருவருக்கும், அதே பகுதியில் பூ விற்கும் ஒருவருக்கும், மற்றொருவருக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குளித்தலை வட்டாட்சியர் முரளிதரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் குளித்தலை ஆண்டார்மெயின்ரோடு கடைவீதி பகுதிக்கு நேற்று வந்தனர். அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தையும் மூடுமாறு வியாபாரிகளை கேட்டுக்கொண்டனர்.மேலும் அந்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் காரணத்தாலும், நோய் தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ள காரணத்தாலும், அப்பகுதியில் உள்ள அய்யப்பன்கோவில் எதிரே உள்ள இரும்பு கடை முதல் அதே கடைவீதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை வரையுள்ள பகுதிக்குள் யாரும் வராதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து கிருமிநாசினி தெளித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் வேலை செய்த ஜவுளிக்கடையில் வேலை பார்த்தவர்கள், அங்கு ஜவுளி எடுக்கச்சென்ற பொதுமக்கள், அப்பகுதியில் கடைகள் வைத்திருப்பவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவக்குழுவினரால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.குளித்தலை நகர பகுதியில் விதிமுறைகளை மீறி கடை நடத்துவோர் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கடைக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள், நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.