பனமரத்துப்பட்டி, சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையால் தங்கள் நிலம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்யும் விதமாக நேற்று காலை சேலம் மாவட்டம் மல்லூரை அடுத்துள்ள பாரப்பட்டி கூமாங்காடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் வளர்க்கும் கால்நடைகளான ஆடு, மாடு, கோழி மற்றும் செல்லப்பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றுடன் வயல்வெளியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது விவசாயிகள் கோஷம் எழுப்பினர். எந்த காரணத்திற்காகவும் 8 வழிச்சாலையை அனுமதிக்க மாட்டோம், எப்போதும் எங்கள் நிலத்தை 8 வழிச்சாலைக்காக விட்டுத்தர மாட்டோம் என கோஷமிட்டனர். கொரோனா வைரசால் இந்தியா முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் 8 வழிச்சாலை அமைக்க அவசரம் காட்டி வருகிறது என்றும், மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும், 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக மத்திய அரசு கைவிட வேண்டும் எனக் கூறியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நீதி வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்த பேனரை வைத்திருந்தனர். விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதேபோல் அயோத்தியாபட்டணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில், 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் மண்டியிட்டு, தங்கள் நிலத்தை தங்களுக்கே தரக்கோரி விவசாய நிலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இத்திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும், விவசாயிகளின் மீது அக்கறை இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக கூறியும், இதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
You must be logged in to post a comment.