தென்மேற்கு பருவமழையால் ஆண்டிபட்டி பகுதியில் குளிர் காற்று அதிகரித்துள்ளது!!

காய்ச்சல் பாதிப்பு

ஆண்டிபட்டி: தென்மேற்கு பருவமழையால் ஆண்டிபட்டி பகுதியில் வெயில் தாக்கம் குறைந்து சாரல், குளிர் காற்று அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு, சளி, இருமல் தொல்லைக்கு பெரும்பாலானோர் சித்த மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். ஏற்கனவே கொரோனா பரவும் சூழலில் தற்போதுள்ள பருவநிலை மாற்றம் கூடுதல் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

மின்வாரியத்தினர் தீவிரம்

கம்பம்: பள்ளத்தாக்கு சுற்றுப்பகுதிகளில் சூறாவளி காற்றில் நுாற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே நகரங்கள், கிராமங்களில் அவற்றை சீரமைத்து குடியிருப்புகளுக்கு மின்சாரம் தந்த நிலையில் விவசாய மின் இணைப்புகளுக்கு சப்ளை வழங்குவதற்கான முயற்சியில் மின்வாரியத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

துார்வாரும் பணி துவக்கம்

தேவதானப்பட்டி: மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அ.தி.மு.க., தன்னார்வலர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 12 கண்மாய் துார்வாரப்பட உள்ளது. கெங்குவார்பட்டி மத்துாவர்குளம் கண்மாய் துார்வாரும் பணியை துணை முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கினார். ரவீந்திரநாத்குமார் எம்.பி., கலெக்டர் பல்லவி பல்தேவ், பெரியகுளம்கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் செல்லமுத்து, அதிகாரிகள் பங்கேற்றனர்.

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

சின்னமனுார்: தேனி மாவட்ட பா.ஜ., விவசாய அணி சார்பில் ஆலோசனை கூட்டம் சின்னமனுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் லோகன்துரை முன்னிலை வகித்தார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் முழுவதும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், நீர் நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடவடிக்கை

தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் மெயின் ரோடு கடை அருகில் மின் கம்பம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விபத்து அச்சம் ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்றி அமைத்தனர்.

இருளில் மூழ்கிய மலைக்கிராமம்

போடி: குரங்கணி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்று, இடியுடன் கனமழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. மின்தடையால் குரங்கணி, கொட்டகுடி, நரிப்பட்டி, முட்டம், முதுவாக்குடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மக்கள் இரவில் இருளில் தவித்தனர். மின்வாரியத்தினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் நீர் பெருக்கெடுத்தது.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author